Thursday, December 10, 2015

கடலில் வீணாகக் கலக்கும் பாலாற்று நீர்

கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், போதிய தடுப்பணைகள் இல்லாததாலும், பல இடங்களில் மணல் வரைமுறையின்றி மொத்தமாக அள்ளப்பட்டதாலும் வீணாக உருண்டோடி கடலில் கலக்கிறது. எனவே பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளின் நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகத்தில் 93 கி.மீ. தொலைவும், ஆந்திரத்தில் 33 கி.மீ. தொலைவும், தமிழகத்தில் 222 கி.மீ. தொலைவும் ஓடி சென்னைக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள வயலூர் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.
இந்த பாலாறு ஆசியாவின் தொன்மையான ஆறுகளில் ஒன்று. இதன் மணற்பரப்பின் உயரத்தைக் கொண்டு நீரியல் அறிஞர்கள் ஆற்றின் வயதை கணக்கிட்டு இதனை தொன்மையான ஆறு என்று உறுதியாகக் கூறுகின்றனர். இந்த ஆற்றின் வழியாகப் படகுகள் மூலம் பொருள்கள் வந்தது தொடர்பாக பெரும்பானாற்றுப்படை உள்ளிட்ட நூல்களில் குறிப்புகள் உள்ளன.


வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் இந்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளன. வடதமிழ்நாட்டின் பெரும் பகுதிகளை வளமாக்கி வந்த பாலாற்றில் கடந்த 23 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. ஆற்காடு பகுதியில் அணை உள்ள இடத்தில் மட்டும் அவ்வப்போது தண்ணீர் வரும். ஆறுகளில் நீர் ஓடும்போது மணலில் நீர் ஊறி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும். ஆனால் இந்த ஆற்றில் மணல் பெருமளவு அள்ளப்பட்டு விட்டதால் வரும் நீர் அப்படியே உருண்டோடுகிறது என்றும், எனவே இந்த ஆற்று நீரை சேமிக்கும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியதாவது:
கோமதிநாயகம் என்னும் நீரியல் அறிஞர் ஆசியாவின் மிகத் தொன்மையானது பாலாறு என்று தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.



பழைமையான ஆறு என்ற வகையில் பாதுகாக்கா விட்டாலும் இந்த பாலாற்றை நம்பி பல நூறு ஏரிகளும், ஆயிரக்கணக்கான விவசாயிகளும் உள்ளனர். இந்த ஆற்றில் இருந்து கால்வாய்கள் வழியாக பழவேரி, உத்தரமேரூர் ஏரி உள்பட பல்வேறு ஏரிகளுக்கு நீர் செல்கின்றது. மேலும் பாலாற்றில் இருந்த அதிக மணற்பரப்பு பெருமளவு நீரை உறிஞ்சி காஞ்சிபுரம், சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தும்.
ஆனால் தற்போது பாலாற்று மணல் அதிக ஆழத்துக்கு சுரண்டப்பட்டுவிட்டதால் ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய் ஆற்றைவிட உயரத்தில் உள்ளது. நீர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆற்றில் உயர்ந்தால்தான் இந்த கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் நிலை உள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களும், மத்திய அரசின் ரயில் நீர் தொழிற்சாலையும் பாலாற்று நீரை நம்பியே உள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வந்த மழைவெள்ளத்தை தேக்கி வைக்க வழியில்லாமல் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. எனவே பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நிலத்தடி நீர் மட்டம் ஏறினால் இந்த பகுதியில்  உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். அரசாங்கம் செய்யுமா?

No comments:

Post a Comment