Thursday, August 6, 2015

புதினா சாகுபடி - Mint Cultivation

புதினாவின் விவசாயப்பணி என்பது மிக எளிமையான சிறந்த தொழிலாகும். நிலவளம் உள்ள ஏழை நிலச் சுவான்தார்கள்கூட இந்தத் தொழிலின் மூலம் பெரும் பணம் திரட்டலாம் வளமான ஈரப்பதம் உள்ள மண் புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும்.

படர்ந்து விரிந்த தென்னந்தோப்புகளில் நன்றாக நிலத்தை உழுதபின் மக்கிய கோழிக் கழிவுகளை ஏக்கருக்கு 5 டன் வீதம் முதலில் இடவேண்டும். இதன்பிறகு ஒரு மூடை டி.ஏ.பி.யும் ஒரு மூடை மூரேட் ஆப் பொட்டாசியமும் அடித்தள உரமாக இடவேண்டும். தென்னை மரங்களிலிருந்து நான்கடி தூரத்தில் 8 x 6 அடி பாத்திகளை வாய்க்கால் வசதிகளுடன் சீராக அமைக்க வேண்டும். ஒன்றரை அடி ஆழத்திற்கு பாத்திகளைத் தோண்டி, கிளறிவிட்டு, நீர் பாய்ச்சி, நடுவதற்கு தயார் செய்ய வேண்டும்.
நடுவதற்காக 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை நீளம் உள்ள புதினா தண்டுகளையும், கிளை விழுதுகளையும் பயன்படுத்தலாம். தண்டுகளைச் செங்குத்தாக நடவேண்டும். சுமார் ஐந்து செ.மீ. பதிந்து இருக்கும்படியும் அதில் ஒன்று அல்லது இரண்டு கணுக்கள் இருக்குமாறும் வேர் விடுவதற்கு ஏதுவாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை, 20 முதல் 25 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். நடுவதற்கு ஏற்ற காலம் ஜூலை மாதம் முதல் ஜனவரி மாதம் வரை உள்ளதாகும்.

நிலத்தின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு இருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நட்ட 60 நாட்களில் கூரான கத்திகளால் புதினாவை அறுவடை செய்யலாம். வேரிலிருந்து 3 செ.மீ. விட்டு, 25-30 செ.மீ. நீளம் உள்ள தழைகளை அறுவடை செய்யலாம். அதைத் தொடர்ந்து அறுவடைகளை 55-60 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம். அறுவடையைக் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் செய்யலாம்.
அறுவடை செய்த தழைகளை அதே நாளில் விற்பனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். மேலும் அறுவடை செய்தவுடன் நிழல் உள்ள அறைகளில் போட்டு தென்னஞ் சோகைகளைக் கொண்டு மூடி, புதினாவின் புதுத்தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அறுவடை முடிந்தபின், பதினைந்து நாட்களுக்குப் பிறகு மேலுரம் இடவேண்டும். இதற்காக ஏக்கருக்கு 20கிலோ டி.ஏ.பி., 20 கிலோ பொட்டாஷ், 10 கிலோ பாக்டம்பாஸ் ஆகியவற்றை 36 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பின் அதில் 400 லிட்டர் தண்ணீர் சேர்த்து, பாசன நீருடன் கலக்கும் விதத்திலான அமைப்பைச் செய்ய வேண்டும். இவ்விதம் ஒரு ஆண்டில் ஆறுமுறை செய்ய வேண்டிவரும். உரம் இடுவதற்கு முன்பே பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். இவ்விதமான புதினா விவசாயம் மிக நல்ல பலனைக் கொடுக்கும்; பணப்பயிராக விளங்கும்.

No comments:

Post a Comment