Wednesday, August 5, 2015

நன்னீரில் இறால் வளர்ப்பு - Farming Fresh Water Prawns


நன்னீரில் இறால் வளர்ப்பு: தண்ணீர் வாழ் இறால்கள் பலவகை இருப்பினும் குறுகிய காலத்தில் கூடுதலாக வளர்ச்சி, கண்ணைக்கவரும் தோற்றம் ஆகிய நன்மையால் நீலக்கால் இறால் மற்றும் மோட்டு இறால் ஆகிய  இரு ரகங்களை மட்டுமே தனியாகவோ அல்லது கெண்டை மீன்களுடன் சேர்த்தோ வளர்க்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மணல், வண்டல், களிமண் கலவை 1.5 : 1 :  1.5 என்ற விகிதத்தில் ஒவ்வொரு குளமும் 1000 முதல் 5000 சதுரமீட்டர் பரப்பளவில் செவ்வக வடிவத்தில் அமைக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் உள்மடை, வெளிமடை அமைக்க வேண்டும். சுலபமாக இறால் பிடிக்க வெளிமடைக்கு அருகே 2 மீட்டர் விட்டமும், ஒரு மீட்டர் ஆழமும் உள்ள இறால் பிடிகுழி ஒன்று தயார் செய்ய வேண்டும். குளக்கரை சரிவு 1 : 1.5 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும்.


குளம் தயார் செய்தல்: நிலத்தை நன்றாக காயவைத்து உழவேண்டும். 500 கிலோ நீர்த்த சுண்ணாம்பு இடவேண்டும். கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 வரை உயர்த்த வேண்டும். மாட்டுச்சாணம், கோழிக்கழிவு குளத்தில் இட்டு, குளத்தின் நீர்மட்டம் 30 செ.மீ. அளவில் இருக்கச் செய்ய வேண்டும். 100 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக முதல் தவணையாக போடவேண்டும். 15 நாட்கள் கழித்து நீரின் நிறம் பசுமையாக மாறியதும் நீர்மட்டத்தை 1 மீட்டருக்கு உயர்த்தி அதை அறுவடைக்காலம் வரை பராமரிக்க வேண்டும்.


இறால் குஞ்சு இருப்பு வைத்தல்: தனியார் மற்றும் அரசு இறால் குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து நன்னீர் இறால் குஞ்சுகளைப் பெற்று எக்டருக்கு 50,000 வரை இருப்பு செய்யலாம். இருப்பு செய்வதற்கு முன் நாற்றங்கால் சூழ்நிலையில் வைத்து இரு வாரங்களுக்கு உணவு கொடுத்து பின்னர் விட்டால் பிழைப்பு விகிதங்கள் கூடும்.




இருப்பு செய்தபின் பராமரிப்பு: இருப்பு செய்த பின்னர் குளத்துநீரைப் பாதுகாப்பது முக்கியம். நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன், கார அமிலத்தன்மை மற்றும் மிதக்கும்  உயிரினங்களின் உற்பத்தியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வெப்பம் 26-32 டிகிரி செல்சியஸ், ஆக்சிஜன் 5 மி.கி/லிட்டர் இருந்தால் இறால்கள் நன்கு வளரும். நீரில் பிராணவாயு அளவை சரியாக பராமரிக்க காற்றூட்டும் சாதனத்தை உபயோகிக்கலாம்.




தீவனம்: ஈரமாகவோ, காய்ந்த நிலையிலோ உணவைக் கொடுக்கலாம். காய்ந்த நிலையில்  இறால் உணவு செய்வதற்கு மீன், நிலக்கடலை, அரிசி குருணை, கோதுமைப் புண்ணாக்கு, மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவை கலப்பு பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. தனியார் வர்த்தக நிறுவனங்கள் இறால் தீவனத்தை முறுக்கு, வற்றல் வடிவத்தில் தயாரித்து விற்பனை செய்வதை வாங்கியும் பயன்படுத்தலாம். 





அறுவடை மற்றும் விற்பனை: 5 மாதங்களில் இறால் சராசரி 50 கிராம் அளவில் வளர்ந்துவிடும். நீளக்கால் இறால்கள் அதிகபட்சம் 250 கிராம் வளர்ச்சி அடையும். இறால்களைப் பிடிப்பதற்கு தண்ணீரை வடித்த பின்னர் இழுவலை அல்லது வீச்சு வலையை உபயோகிக்கலாம். நீரை  முழுமையாக வெளியேற்றிய பின்னர் கை தடவல் முறையிலும் பிடிக்கலாம்.



பொருளாதாரம்: ஒரு எக்டரில் (நீர்பரப்பு) – நிலம், கிணறு, காற்றூட்டி, மின் இணைப்பு, தங்கு அறை வரையில் செலவு சுமார் ரூ.2 லட்சம்.

செயல்முறை செலவுகள்: இறால் குஞ்சு விலை, தீவனம், உரம் மற்றும் இதர செலவுகள் ரூ.3 லட்சம்.


வருமானம்: 5 மாதங்களில் அறுவடை சராசரி வளர்ச்சி 50 கிராம் வீதம் 1500 கிலோ இறால் விற்பனை ரூ.3.75 லட்சம். ஒரு அறுவடைக்கு நிகர லாபம் ரூ.1.75 லட்சம். இரு அறுவடை (ஒரு ஆண்டில்) நிகரலாபம் ரூ.3.5 லட்சம்.(தகவல்: வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288. -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






No comments:

Post a Comment