Thursday, April 30, 2015

புளி சாகுபடி (Puli Saagupadi) - Tamarind Cultivation


புளி இரகங்கள் :
  • பிகேஎம். 1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
  • மணல் கலந்த மண்  இதன் வளர்ச்சிக்கு மிகவம் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
  • சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது, மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.
பருவம் : ஜுன்  – டிசம்பர்
விதையும் விதைப்பும்
இனப்பெருக்கம் : விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல்.
இடைவெளி : 8-10 x 8-10 செ.மீ
நடவு :
  • 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும்.
  • குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
  • ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவவேண்டும்.
  • செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றிக் கட்டிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்
  • கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
  • மானாவாரிப் பயிராக பயிரிடப்படுவதால் வழக்கமாக உரமிடுவது இல்லை. இருந்தாலும் அங்கக உரங்களை இட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
  • செடிகளின் ஒட்டுக்கு அடிப்பாகத்தில் தோன்றும் வேர்க்குச்சியின் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
  • மற்றும் காய்ந்த நோய் தாக்கிய குச்சிகளையும் அகற்றவேண்டும்.
ஊடுபயிர் :
  • கன்றுகள் வளர்ந்து விளைச்சலுக்கு வரும் வரை முதல் 4 ஆண்டுகளில் ஊடுபயிர்களைப் பயிர் செய்யலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
  • இலைத்தின்னும் புழு :எண்டோசல்பான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • சாம்பல் நோய் : இந்நோயைக் கட்டுப்படுத்த டைனோகாப் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
  • நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில் தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
  • மகசூல் : ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.

கால்நடைகள் காப்பீடு திட்டம் (Kaal Nadaigal Kaapitu Thittam) - Livestock Insurance

கால்நடைகள் காப்பீடு திட்டம்


கால்நடைகள் காப்பீடு திட்டம் மத்திய அரசால் உதவி செய்யப்படும் திட்டமாகும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் 2005-2006 மற்றும் 2006-2007 மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம்  2007-08யிலும் முன்னோடித் திட்டமாக தேர்வு பெற்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2008-09யிலிருந்து இத்திட்டம் நாட்டிலுள்ள 100 புதிய மாவட்டங்களில் ஒழுங்கு முறையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கலப்பின மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்டு ஆடு, மாடுகள் மற்றும் எருமைகளுக்கு சந்தை நியாய விரையை அதிகபட்ச காப்பீடாக எடுத்துக் கொள்வர். 50 சதவிகிதம் வரை காப்பீடு. மானியமாக வழங்கப்படுகின்றது. மானியத்திற்காக ஆகும் அனைத்து செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். மூன்றாண்டுகள் எடுக்கப்பட்ட திட்ட உடன்பாட்டிற்கு அதிகபட்சமாக ஒரு பயனாளி 2 கால்நடைகளுக்கு மானியச் சலுகைகள் பெறலாம். இத்திட்டம் கோவா மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும் அதற்குரிய மாநில கால்நடை அபிவிருத்தி வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் முன்னோடியாக செயல்படுத்தப்பட்ட 100 மாவட்டங்களில் மேலும் விரிவுப்படுத்தி, நாட்டு வகை ஈடு, மாடு, வெரி எருமை மற்றும் மிதுன் போன்ற நிறையக் கால்நடை இனங்களையும் சேர்த்துக் கொள்ளப்படும்.

கால்நடை காப்பீடு திட்டத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்களால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. கால்நடை இறப்பால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கான பாதுகாப்பு மற்றும் கால்நடை மற்றும் அதன் உற்பத்தி பொருட்களின் தரத்தில் உள்ள மேம்பாடு போன்ற கால்நடை காப்பீடு சலுகைகள் மூலம் பெறப்பட்ட பயன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதைக் காட்டுவதாகும்.
  1. கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டுதல்கள்
  • செயல்படுத்தும் நிறுவனம்
  • திட்டத்தை அமல்படுத்தும் மாவட்டங்கள்
  • காப்பீடு நிறுவனங்களின் தேர்வு
  • கால்நடை மருத்துவர்களை சம்பந்தப்படுத்துதல்
  • காப்பீடு காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் வெகுமதி மானியத்தை சரி செய்தல்.
  • திட்டத்தின் கீழ் காப்புறுதி பெறும் கால்நடைகள் மற்றும் பயனாளிகளின் தேர்வு
  • கால்நடைகளின் சந்தை விலையை தீர்மானித்தல்
  • காப்பீடு பெற்ற கால்நடைகளைக் கண்டறிதல்
  • காப்பீடு செல்லத்தக்க காலக்கட்டத்தில் உரிமையாளர்களை மாற்றுவது
  • பணக்கோரல்களைத் தீர்மானித்தல்
  • திட்டத்தை திறனுடன் மேற்பார்வையிடுதல்
  • கால்நடை மருத்துவர்களுக்கு வெகுமானம் வழங்குதல்
  • காப்பீடு பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்
  • ஊக்குவிப்புத் தொகை
கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டுதல்கள்
கால்நடை துறை என்பது தேசிய அளவில் குறிப்பாக கிராமப் பொருளாதாரத்தில் முக்கியமான துறையாகும். கால்நடைகளை வளர்ப்பதன் மூலம் கிடைக்கின்ற கூடுதல் வருமானம் எதிர்பாராத பயிர் உற்பத்தி இழப்புக்களின் போது உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் ஏழை மற்றும் நிலமில்லாத விவசாயிகளுக்கு வாழ்க்கையின் ஆதாரமாகவும் இருக்கின்றது.
கால்நடை துறையை மேம்படுத்த, நோய்களை கட்டுப்படுத்த பல பயனுள்ள  நடவடிக்கைகள் மற்றும் கால்நடைகளின் மரபணு தரத்தில் மேன்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் அப்படிப்பட்ட  கால்நடைகளினால் ஏற்படும் இழப்புகளிலிருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்காக உத்திரவாத பாதுகாப்பு கொடுப்பதற்கு ஒரு ஆக்க முறை தேவைப்படுகின்றது. இத்திசையில், மத்திய அரசாங்கம் உதவும் கால்நடை காப்பீடு திட்டம், பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. 2008-09ல் செய்யப்பட்ட 100 புதிய மாவட்டங்களில் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் முடியும் வரை, அதாவது 2011-12 செயல்படுத்தப்படும். நிர்வாக மேலதிகாரிகள் இத்திட்டத்தை மாநிலங்களில் செயல்படுத்தும் நெறிமுறைகள் விரிவாக பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்படுத்தும் நிறுவனம்
தேசிய கால்நடை இனப்பெருக்கத் திட்டத்தை (NPCBB) மத்திய, அரசால் உதவிப் பெற்று, கால்நடை பால் பண்ணை மற்றும் மீன் வளர்த்தல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் குறிக்கோள், செயற்கை கருவூட்டல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு வகைக் கால்நடைகளை பயன்படுத்தி கால்நடைகளின் மரபணுவை மேம்படுத்துவதாகும். NPCBB திட்டத்தை மாநில கால்நடை அபிவிருத்தி வாரியங்கள் போன்ற மாநில செயல்படுத்தும் நிறுவனங்கள் (SIAs) செயல்படுத்துகின்றன. NPCBB மற்றும் கால்நடை காப்பீடு இரண்டிற்கும் ஒரு அனுசரணை கொண்ட வருவதற்காக, கால்நடை காப்பீடு தரப்படும். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் NPCBB திட்டத்தை தேர்வு செய்துள்ளன. NPCBB திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள் அல்லது SIAs இல்லாத பட்சத்திலோ, கால்நடை காப்பீடு திட்டத்தை, மாநில கால்நடைத் துறை செயல்படுத்தும்.

திட்டத்தை அமல்படுத்தும் மாவட்டங்கள்
திட்டம், ஒழுங்கு முறை அடிப்படையில் நாட்டில் புதிதாக தேர்வு பெற்ற புதிய 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் கலப்பின மற்றும்  அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த ஆடு, மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மட்டுமே உகந்ததாகும். இத்திட்டம் தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

மாநிலம் / மாவட்டத்தின் பெயர்
தமிழ்நாடு

  • விழுப்புரம்
  • திருநெல்வேலி
  • திருச்சிராப்பள்ளி
  • தர்மபுரி
  • திருவண்ணாமலை
காப்பீடு நிறுவனங்களின் தேர்வு
போட்டி மிகு வெகுமதி விகிதங்கள், உடன்பாடு விநியோகித்தல் மற்றும் பணக்கோரல்களுக்கு தீர்வு காணுவதில் எளிதான நெறிமுறைகளை கடைப்பிடித்தல் போன்ற அதிகப் பயனுள்ள சலுகைகள் கொண்ட காப்பீடு நிறுவனம் மற்றும் அதன் விதிமுறைகள், நிர்பந்தங்களைக் கொண்டு, காப்பீடு நிறுவனத்தை தீர்மானிக்கும் அதிகாரம் முதன்மை செயல் அலுவலருக்கு உள்ளது. ஒரு காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்யும் பொழுது, வெகுமதி விகிதங்களுக்கு செயலாற்றும் சக்தி இருக்கிறதா சேவை செயல்திறன், விதிமுறைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள் போன்ற அனைத்தையும் கருத்தில் ஏற்றுக் கொள்ளவேண்டும். மாநிலத்தில் போதுமான அளவில் பிணையப்படும் போது மற்றும்  தனியார் பொது காப்பீடு நிறுவனங்களிடமிருந்து எழுத்து வடிவில் விலைக் கூறல்களை வரவேற்கிறார். இத்திட்டத்தை வெற்றிகரமாக மற்றும் ஆற்றல்மிக்கத் திறனுடன் செயல்படுத்தவும், கால்நடை உரிமையாளர்களிடையே பிரபலப்படுத்தும் வகையிலும் காப்பீடு நிறுவனம் / நிறுவனங்களை, CEO அந்நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்வார்.

எந்தக் காப்பீடு நிறுவனமானது காப்பீடு செய்த  கால்நடைகளுக்கு இறப்பதுடன் பிற ஊனங்களுக்கும் சேர்த்து காப்பீடு காப்புறுதி வழங்கினால் வரவேற்கத்தக்கது. எனினும் அவ்வாறான கூடுதல் சலுகைகளுக்கு வெகுமதியில் எந்த மானியமும் வழங்கப்பட மாட்டாது. கால்நடையின் மரணத்தால் ஏற்படும் இழப்பைத் தவிர மற்ற பிற இழப்புகள் அனைத்திற்கும் முழுமையான வெகுமதியை பயனாளிகள் செலுத்தித் தான் காப்பீடு காப்புறுதி பெறவேண்டும். மேலே குறிப்பிட்டது போல, உடன்பட்ட வெகுமதி விகிதம் போட்டி மிகுந்தது என்பதை  CEO தான் உறுதிப்படுத்தவேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், வெகுமதி விகிதம் ஓராண்டு உடன்பாட்டிற்கு 4.5 சதவிகிதம் மேலும் மற்றும் மூன்றாண்டு உடன்பாட்டிற்கு 4.5 சதவிகிதம் மற்றும் மூன்றாண்டு உடன்பாட்டிற்கு 12 சதவிகிதம் மேலும் இருக்கக்கூடாது. 

பொதுவாக, ஒரு மாவட்டத்திற்கான வேலைகளை ஒரே காப்பீடு நிறுவனத்திடம் ஒப்படைக்கவேண்டும். எனினும் விதிமுறைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், ஒரு மாவட்டத்தில் ஒன்றிற்கும் மேலான காப்பீடு நிறுவனங்களிடம் அவர்களிடையே போட்டியை ஊக்குவிக்கும் வகையிலும், இத்திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையிலும் செயல்படுத்த அனுமதிக்கலாம். பணக்கோரல் தீர்வுகள் அல்லது சேவையில் ஏதாவது குறைபாடு காப்பீடு நிறுவனத்தால் ஏற்பட்டிருந்தால், இம்மாதிரியான விஷயங்களில், நாட்டின் முதன்மை ஆணையமான “ காப்பீடு ஒழுங்குபடுத்துதல் மற்றும் அபிவிருத்தி ஆணையத்தின்” கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மருத்துவர்களைத் திட்டத்திற்குள் கொண்டு வருதல் கிராம நிலையில் கால்நடை  மருத்துவர்களை திட்டத்திற்குள் கொண்டு வருவது. இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு முக்கியத் தேவையாக இருக்கும். இத்திட்டத்தில் காப்புறுதி தர வேண்டிய கால்நடைகளைக் கண்டறிதல், பரிசோதித்தல், சந்தை விலையை தீர்மானித்தல், காப்பீடு கால்நடைகளுக்கு அடையாள விவரங்களை கட்டி விடுதல் மற்றும் இறுதியாக பணக்கோரல் எப்போது பெறப்பட்டது என்று கால்நடை சான்றிதழ் வழங்குவது வரை அவர்கள் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.

மேலும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதால் இத்திட்டத்தை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும் உதவியாக இருப்பர். முடிந்த வரை மாநில அரசாங்கத்தில் வேலை பார்க்கும் கால்நடை மருத்துவர்களை மட்டுமே இத்திட்டத்தில் ஈடுபடுத்த முடியும். அரசாங்க கால்நடை மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே, இந்திய கால்நடை மன்றத்தால் பதிவு செய்யப்பட்ட தனியார் கால்நடை மருத்துவர்களை ஈடுபடுத்தலாம். அப்படிப்பட்ட கால்நடை மருத்துவர்களின் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும், கால்நடை மருத்துவர்களின் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும், கால்நடைத் துறை மாவட்ட அதிகாரியால் தயார் செய்யப்படும். அவ்வாறு கால்நடை மருத்துவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்தில் மருத்துவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்தில தேர்வு பெற்ற காப்பீடு நிறுவனம் மற்றும் உரிய பஞ்சாயத்து ராஜ் ஸ்தாபனத்திற்கு வழங்கப்படும்.

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (Paal Valathai Perukkm Kambu Neapiar Ottu Pull) - Napier grass for milch cows

பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 ரகபுல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.


  • இந்த தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவன புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம் என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்துள்ளார்.
  •  கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்தைக் கொண்டவை.
  • அதிக தூர்களுடன் (செடிக்கு 30 முதல் 35 தூர்கள்) சாயாத் தன்மை கொண்டது. அகலமான, மிருதுவான இலைகள் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.
  • இவ்வகை பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் தாக்காது. அதிக உலர் தீவன மகசூல், புரதச்சத்து கொண்டவை. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம்.
  • கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன.
சாகுபடி தொழில்நுட்பம்:
  • ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம். நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.
  • பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
  • பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
  • கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.
  • இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம். எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம். மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
  • மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியரை 09884402613 என்ற கைப்பேசி எண்ணிலோ, 0442745 2371 என்ற தரைவழி தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, April 28, 2015

கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி? (Karavai Maadugalai Thearvu Seiyum Murai) - How to choose milch cows?

பால் பண்ணைத் தொழில் மீதான ஆர்வம் விவசாயிகள் மட்டுமன்றி, பலதரப்பட்ட மக்களிடமும் அதிகரித்து வருகிறது. அதனால், பால் பண்ணைகள் அமைத்து லாபகரமாக நடத்திட தரமான பசுக்களைத் தேர்வு செய்து வளர்ப்பது அவசியமாகும்.

தரமான பசுக்களைத் தேர்வு செய்வது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியர் த.ஆனந்த பிரகாஷ்சிங் கூறியது:
  • ஒரு தனிப்பட்ட பசுவின் உற்பத்தித் திறனை பாரம்பரிய உற்பத்தித் திறன், தனி மாட்டின் உற்பத்தித் திறன், சந்ததியரின் குணாதிசயங்கள் ஆகிய மூன்று காரணிகளால் அறிய முடியும்.
  • இருப்பினும், இந்த மூன்று அளவுகோல்களும் எப்போதும் கிடைப்பதில்லை. அத்தகைய சமயங்களில் பசுவின் தோற்றத்தைக் கொண்டு, அதன் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.
  • பால் பண்ணைத் தொழிலுக்கு பண்ணைகளில் பராமரிக்கப்படும் பசுக்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
  • கறவை மாடுகளை வாங்கும்போது கலப்பின மாடாகவும் (ஜெர்ஸி அல்லது ப்ரிசியன் கலப்பினம்), முதல் ஈத்து மாடாக அல்லது இரண்டாவது ஈத்துக்குத் தாண்டாத மாடாகவும் இருக்க வேண்டும்.
  • பால் மாடுகளில் உற்பத்தித் திறன் இரண்டாவது ஈத்தில் இருந்து 4ஆவது ஈத்து வரை அதிகரிக்கும். அதன்பிறகு, பாலின் அளவு குறையக்கூடும்.
  • எனவே, பால் அதிகம் தரக்கூடிய ஈத்துள்ள 2 முதல் 4ஆவது ஈத்தில் உள்ள மாடுகள் பண்ணையில் இருப்பது அவசியம்.
  • தவிர, மாடுகள் 5, 6 ஈத்துக்களைத் தாண்டும் போது, 8 முதல் 10 வயதைக் கடந்திருக்கும் என்பதால், அவற்றைப் பராமரிப்பது லாபகரமானதாக இருக்காது.
  • மாடுகளை கன்று போட்ட 10 முதல் 15 நாள்களுக்குள் வாங்கிட வேண்டும்.
  • ஒரு மாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் கண்கள் பிரகாசமாகவும், மாடுகள் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.
  • வெளி உறுப்புகளிலிருந்து எந்தவித திரவம், சீழ் வரக் கூடாது.காயங்கள், புண்கள் போன்றவை இருக்கக் கூடாது.
  • கால்கள் நன்றாக அமைந்து வலுவாக இருக்கவும், மாடு அசை போட்டுக் கொண்டு இருக்கவும், மேல் உதடு ஈரமாக வியர்வைகளைக் கொண்டிருக்கவும் வேண்டும்.
  • பால் மடியானது நன்றாக விரிந்து உடலோடு ஒட்டி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பாலைக் கறந்தவுடன் சுத்தமாக சுருங்கிட வேண்டும்.
  • 4 காம்புகள் இருக்க வேண்டும். அவை சம அளவுகளாகவும், சம இடைவெளிகளுடனும் அமைந்திருக்க வேண்டும்.
  • வயிற்றின் அடிப் பகுதியில் பால் மடிக்கு முன் இருக்கும் பால் நரம்புகள் நன்றாகத் தடித்து வளைந்து நல்ல ரத்த ஓட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • பால் மாடுகளின் நெஞ்சுப்பகுதியை விட வயிற்றுப் பகுதி அகன்று இருக்க, கால் முட்டிகளுக்கு இடையே இடைவெளி அதிகமாகவும், வயிற்றுப் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய தீவனத்தை உள்கொண்டு அதிக அளவு பாலை உற்பத்தி செய்யும்.
  • கறவை மாடுகளை சந்தையில் வாங்குவதைத் தவிர்த்து, மாட்டின் உரிமையாளரின் இடத்துக்கு நேரடியாகச் சென்று மாட்டின் கறவை அளவை தொடர்ந்து மூன்று முறை கறந்து பார்த்து வாங்க வேண்டும்.
  • தவிர, மாடு விற்பனையாளரிடம் மாட்டுக்கு இதுவரை தரப்பட்ட தீவனக் கலவை, தீவனம் அளவு குறித்து தெரிந்து கொண்டு, அதே கலவையில் தர வேண்டும்.
  • மாடுகளுக்கு தீவனத்தை திடீரென மாற்றக் கூடாது. மாற்றினால் ஜீரண சக்தி இழந்து பால் உற்பத்தி குறையக்கூடும்.
  • அதேபோல, மாடுகளுக்கு முறையாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பனிக்காலங்களில் செம்மறி ஆடுகளை பாதுகாக்க வழிகள் (Pani Kaalangalil Semmari Aadai Paramarikum Murai) - Ways to protect sheep in winter season


பனிக்காலங்களில் செம்மறி ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க  ஆட்டு பட்டி பராமரிப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்துக்களை விவசாயிகளுக்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விவசாயம் மட்டுமல்லாமல் ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்த்து ஜீவனம் நட த்தி வருகின்றனர். தற்போது  மழையை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கியுள்ளது. பனி ஆரம்ப காலத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் செம்மறி ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பனிக்கால நோய்களிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது எவ்வாறு என்பது பற்றி கரூர் கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:
 


  • பனி அதிகமான காலங்களில் செம்மறி ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஆட்டுப்ப ட்டி பராமரிப்பு மிக முக்கியகும்.
  • பட்டி சரியாக அமைக்காவிட்டால் ஆடுகளுக்கு சளி, இருமல், வாய்ப்புண் நோய், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்புள்ளது. இதனல் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்.
  • இவற்றை தடுக்க ஆடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டி தரம்புகள் விசாலமாக அமக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஆட்டுக்கு 4 சதுர அடி இடைவெளி விட வேண்டும்.
  • பட்டிக்கு மூன் றில் ஒரு பங்கு அளவு மட் டும் சாக்கு படுதா போடுதல் போதுமானது.
  • காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி கிழக்குப் பகுதியில் வெற்றிடம் விட வேண்டும்.
  • தென்னந்தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்கக் கூடாது. மேடான இடத்தில் பட்டி அமைக்க வேண்டும்.
  • பட்டி தரம்புகளின் சுற்றுப்பகுதி, சாலை மற்றும் பெரிய ஆடுகளின் மீதும் 15 நாட்களுக்கு ஒரு முறை பியூடாக்ஸ் எனும் மருந்தை ஒரு லிட்டர் நீரில் ஒரு மில்லி கலந்து கை தெளி ப்பான் மூலம் தெளிப்பது நல்லது. இதனால் வாய்ப்புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி மற்றும் புற உண்ணிகளை தவிர்க்கலாம்.
  • மாலையில் வேம்பு, யூக்கலிப்டஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளை இந்த பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாத்து நஷ்டத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

முப்போகம் பலன் தரும் திசு வாழை (Thisu Vaalai) - Effective Banana Tissue Culture


விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.

மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் வாழ்வாதாரத்தை வாரி வழங்கும் வெண்டை, கத்தரி விவசாயத்தை அரை ஏக்கரில் செய்து வருகிறார். திசுவாழை பயிரிட்டுள்ள இவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் லாபம் பார்த்து வருகிறார்.

அவர் கூறியது:
ஜி-9 வகை திசு வாழை தோட்டக்கலை துறை உதவி வேளாண் அலுவலர் மங்களசாமி மூலம் எனக்கு கிடைத்தது. கன்றுகள் நம்முடைய வாழை போன்று அல்லாமல் சிறிய செடி போல இருக்கும். 11 மாதத்தில் காய்ப்பு எடுக்க ஆரம்பித்து விடலாம். பச்சை பழ வாழை பயிரிட்டுள்ளேன். ஒரு தாரில் 135 முதல் 140 காய்கள் இருக்கும். தற்போதைய நிலையில் தார் ஒன்று ரூ.500 முதல் 600 வரை விற்பனையாகிறது.

ஒரு வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது. ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெற முடியும். ஆறு அடிக்கு ஒரு கன்று நட வேண்டும். 15-வது நாளில் ஒரு வாழைக்கு 5 கிலோ மாட்டு சாண உரம், 200 கிராம் டி.ஏ.பி., 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும். 40-வது நாள் இதே அளவு உரம் இட வேண்டும்.


150-வது நாள் 10 கிலோ மாட்டு சாணம் மட்கியது வைக்க வேண்டும். திசு வாழையை பொறுத்தவரை நீர் சத்து அதிகம் தேவை. இதனால் சொட்டு நீர் பாசனம் சிறந்தது.

இந்த வாழை 6-வது மாதம் பூக்கும். 8-வது மாதம் காய்க்க துவங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவாகும். ஆனால், வருமானமோ ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கும். வாழையின் ஊடே காய்கறி விவசாயமும் மேற்கொள்ளலாம்.

அதே போல், நெல் விவசாயம் உரம் போடாமல் இயற்கை விவசாயம் மூலம் மேற்கொண்டு வருகிறேன். நெல் நடவுக்கு முன்பு, வேம்பு இலை, வாகை இலை ஆகியவற்றை நிலத்தில் போட்டு உழுது அதன்பிறகு நடவு பணி துவங்குகிறது. இதனால், இயற்கையான அரிசி நமக்கு கிடைக்கிறது, என்றார்.

இவரை தொடர்பு கொள்ள 09487413100.
டி.செந்தில்குமார், காரைக்குடி.

வாழையில் வாடல் நோய் (Vaalaiyil Vaadal Nhooi) - Banana wilt disease

வாழையில் ஏற்படும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார். 

அறிகுறிகள்
  • தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன் சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும்.
  • பின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும்.
  • கிழங்கினைக் குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வட்ட வட்டமாக இப்பூஞ்சாணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைக் காணலாம்.
  • செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல் நோயின் அறிகுறிகள் அதிக அள வில் காணப்படுகின்றன.
  • வாடல் நோயின் வித்துக் கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது.
  • பூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பரவுகிறது.
மேலாண்மை முறைகள்:
  • வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா, கை போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம்.
  • வாழைக் கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
  • கிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லியினைச் சீராகத் தூவ வேண்டும்.
வாழை பனாமா வாடல் நோய் தடுக்க
  • ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் தூர்ப் பகுதியைச் சுற்றிலும் இடவேண்டும்.
  • காப்சூல் எனப்படும் மாத்திரை குப்பிகளில் 50 மில்லி கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் நிரப்பி நட்ட ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் கிழங்கினுள் செலுத்த வேண்டும்.
  • வாழைக்கிழங்கில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ. ஆழ துளையிட்டு உள்ளே செலுத்த வேண்டும். வாழைத்தண்டில் செலுத்தினால் பயன் இல்லை. குப்பியினைச் செலுத்தியபின் களிமண் உருண்டை கொண்டு துளை வாயிலை மூடிவிடவும்.
  • மாத்திரை குப்பி வைப்பதை தக்க ஆலோசனை பெற்று வைக்க வேண்டும். நோய் தாக்கிய மரங்களை கிழங்கோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். அக்குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.

  • கடலூர் மாவட்டத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் குறிப்பாக நாடு மற்றும் ஏலக்கி ரகங்களில் புதிய வகை வாடல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
  • நோய் தாக்கப்பட்டு குலை தள்ளும் நிலையிலுள்ள வாழை மரங்களில் இலைகள் பழுத்து காணப்படும்.
  • வாழை மரத்தைத் தொட்டவுடன் இற்றுப்போய் சாய்ந்து விடும்.
  • தாக்கப்பட்ட மரங்களை வேருடன் அகற்றிவிட்டு குழிகளில் 50 கிராம் வீதம் பிளீச்சங் பவுடர் தூவ வேண்டும்.
  • அருகாமையிலுள்ள மரங்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற அளவில் கலந்து மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
  • இந்த நோய் விரைவில் பரவும் தன்மையுள்ளதால் வாழை விவசாயிகள் தனி கவனம் செலுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும்.
  • மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள தோட்டக்கலை துறை, வட்டார மையங்களில் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • முனைவர்
    எஸ்.ஜெயராஜன் நெல்சன்,
    ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

மக்காச்சோள விவசாயத்தில் மாநில சாதனை (Makka Chola Vivasayathil Maanila Saathanai) - The state record in maize agriculture

வறட்சியிலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 12 டன்கள் (120 மூட்டைகள்) வரை மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி. மாநிலஅளவில் முதலிடம் பிடித்த இவருக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனது சாதனை குறித்து ராமசாமி கூறியதாவது:
ஒரு எக்டேரில் சாகுபடி செய்வதற்கு உரம், வேலையாட்கள் கூலி, நீர் பாசனத்திற்காக ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்தேன்.


பொதுவாக ஒரு எக்டேருக்கு 8 டன்கள் தான் மகசூல் கிடைக்கும். வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், 12 டன்கள் வரை கிடைத்துள்ளது. தற்போது ஒரு மூடை ரூ.1,350 விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.35 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.

பயிரிடும் முறை:
  • மக்காச்சோளத்தை ஐப்பசியில் பயிரிட்டேன். விதைப்பதற்கு முன்பாக நிலத்தில் கட்டிகள் இல்லாதவாறு தொடர்ந்து பலமுறை உழவு செய்ய வேண்டும்.
  • மண் பொலிவாக இருந்தால் தான் வேர் வெகுவாக கீழே செல்லும். மண் பரிசோதனைப்படி உரமிட்டால், உரம் வீணாவதை தவிர்க்கலாம். ஒரு எக்டேருக்கு அடியுரமாக 135 கிலோ டி.ஏ.பி.,- 30 கிலோ யூரியா, 85 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
  • தொடர்ந்து 12.5 கிலோ நுண்ணூட்ட சத்துகளை 20 கிலோ மண் கலந்து இட வேண்டும். நான், 52/11 என்ற வீரிய ரக விதைகளை பயன்படுத்தினேன். ஒரு எக்டேருக்கு 12.5 கிலோ வரை விதைவேண்டும்.
  • அஸ்சோஸ்பைரில்லம் மூலம் விதை நேர்த்தி செய்தால், வேருக்கு தேவையான தழைச்சத்தை பெற்று தரும். ஒரு கிலோ 10 கிராம் டிவிரிடி அஸ்சோடோமோனசில் பூஞ்சன விதை நேர்த்தி செய்தால், நோய் தாக்குதல் ஏற்படாது.
  • 60 X 20 செ.மீ., இடைவெளியில் விதைகள் நட வேண்டும். களைகொல்லி பயன்படுத்தினேன். களையெடுக்கும்போது, மேலுரமாக 150 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும்.
  • பால் பிடிக்கும் தருணத்தில் 75 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும். நான், கிணற்று பாசனம் மூலம் நீர் பாய்ச்சினேன். சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தினால், நீரை மிச்சப்படுத்தலாம். 15 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும், என்றார்.
இவருடன் பேச: 09362686204

இ.ஜெகநாதன், திண்டுக்கல்.

Friday, April 17, 2015

இனிப்பு மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் (Enippu Makka Cholam Saagubadi) - Sweet Corn Cultivation



  • இனிப்பு மக்காச்சோளம்: இதன் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகையுள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
  • ரோட்டோ வேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கி கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி, ஏக்கருக்கு 3 டிப்பர் என்ற அளவில் தொழுஉரம் கொட்டி கலைத்து விட வேண்டும். ஓர்அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து அதன் மையத்தில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் ஒரு அங்குல ஆழத்தில் நடவு செய்து தண்ணீர் கட்ட வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும்.
  • விதைத்த 3ம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதும்.
  • 20ம் நாளில் களை எடுத்து பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும்.
  • தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை.
  • பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது.கதிர் வருவதற்கு முன்பாக பூச்சிகள் தாக்கினால் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம்.
  • 55ம் நாளில் ஆண் பூவெடுக்கும் 60-ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75ம் நாளிலிருந்து கதிர்முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவிற்கு கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும் அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு 3-4 கதிர்கள் நிற்கும்.
  • அனுபவ விவசாயி சேகர், திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழநாச்சிப்பட்டு கிராமம், தினமும் 200 கிலோவில் இருந்து 300 கிலோ அளவுக்கு அறுவடை செய்து 1 கிலோ 20 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்பனை செய்கிறார். 1 ஏக்கரில் கிடைக்கிற 6 டன் கதிர் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் எடுக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் செலவு போக 90 ஆயிரம்  ரூபாய் லாபம் கிடைக்கிறது. கமிஷன் கடைகளுக்கு அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கும் என்கிறார். தொடர்புக்கு : சேகர், போன்: 09787600991.


  • Thursday, April 2, 2015

    நீர் பரிசோதனை அவசியம் (Neer Parisothanai Avasiyam) - Water Quality Testing is Necessary

    சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.

    முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.
    தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது. மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.
    இரு தன்மைகள்
    • திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் புதிதாக அமைத்த உடனேயே நீரின் பண்புகளை ஆராய்ந்து அறிவது விவசாயத்துக்கு நல்லது. பாசன நீரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை உவர் தன்மை, களர் தன்மை.
    • பாசன நீரில் கால்சியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் குளோரைடுகள், சல்பேட்டுகள் அதிகம் இருந்தால் உவர் தன்மை ஏற்படும்.
    • சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், மெக்னீஷியம் கார்பனேட் ஆகிய உப்புகள் அதிகம் இருந்தால் பாசன நீரில் களர் தன்மை ஏற்படும்.
    • பாசன நீரை ஆய்வு செய்யும் போது அந்த நீரால் பாசன வசதி பெறும் நிலத்தில் உள்ள மண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை பரிந்துரைக்கிறது.


    பரிசோதனை  செய்வது எப்படி
    • கிணற்றில் பம்புசெட் பொருத்தப்பட்டு இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பின்னர் கிடைக்கும் நீரை மாதிரியாகச் சுத்தமான பாட்டிலில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும்.
    • சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும். தாமதம் இல்லாமல் விரைவில் ஆய்வுக் கூடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    • பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும்.
    • கவலை பொருத்தப்பட்ட கிணற்றில், ஒரு மணி நேரம் நீரை இரைத்து விட்டு, பின்னர் நீர் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், திறந்த வெளிக் கிணறா? ஆழ்குழாய்க் கிணறா? குளம் அல்லது ஆற்று நீரா? கிணற்றின் ஆழம் எவ்வளவு மண்ணின் விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
    • பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஈர்ப்பு விகிதம், மெக்னீஷியம் கால்சியம் விகிதம், நீரின் ரசாயனத் தன்மை, ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கிப்படுகின்றன.
    • பாசன நீரை ஆய்வு செய்த பிறகு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய உழவியல் முறைகள், தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி முறைகள், உர நிர்வாகம், நீர் நிர்வாகம் ஆகியவைகளும் வேளாண் அலுவலர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றன.

    கட்டணம் எவ்வளவு?
    • பாசன நீரை ஆய்வு செய்வதற்கு மாதிரி ஒன்றுக்கு, 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  பாசன நீர் ஆய்வுக்காக, மாதிரிகளை சேகரித்து அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
    • அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் பல்கலைக்கழக கிளை அலுவலகங்களிலும், கூட்டுறவுத் துறை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் பாசன நீர் ஆய்வுக் கூடங்கள் உள்ளன.
    • நீரை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், 1,700 ஆய்வு மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

    வறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள் (Varatchiku Uthavum Thennai Naar Kalivugal) - Coconut Coir Helps in Drought

    கடும் வறட்சி காரணமாக தென்னைநார்க் கழிவுத்துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து முதன்முறையாக ஆப்பிரிக்காவுக்கு இக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    தென்னை நகரான பொள்ளாச்சிப் பகுதியில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைகள் பொய்த்து விட்டன.
    இதனால் பொள்ளாச்சிப் பகுதியில் மட்டும் 20 சதவீத தென்னை மரங்கள் முழுமையாகக் காய்ந்துவிட்டன. மேலும் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்கள் காய்க்கும் திறனை இழந்துவிட்டன.
    பொள்ளாச்சிப் பகுதியில் சில ஆண்டுகளாக தென்னை மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நார் மற்றும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகளின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
    இப்பகுதியில் மட்டும் சுமார் 500-க்கு மேற்பட்ட தென்னைநார்த் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
    நாளொன்றுக்கு ஒரு தொழிற்சாலைக்கு சுமார் 40 ஆயிரம் மட்டைகள் தேவைப்படுகின்றன. ஏற்றுமதி அதிகரிப்பதால் மட்டைகளின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தேவை அதிகரித்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன் 50 பைசாவுக்கு விற்ற தென்னை மட்டை இப்போது ரூ. 2-ஆக விலை உயர்ந்துள்ளது.
    இங்கு தென்னை மட்டை கிடைக்காத காரணத்தால், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் 20 லோடு முதல் 40 லோடு வரை தென்னை மட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
    பொள்ளாச்சியில் இருந்து கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவில் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    முதன்முறையாக இந்த ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து ஆப்பிரிக்காவுக்கும் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    வீடுகளின் மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைக்குமாறு தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. வீடுகளின் மாடியில் தோட்டம் அமைக்கும் பகுதியில் கழிவுத்துகள் கட்டிகளை மண்ணுடன் கலந்து பயிரிடுவதால் மகசூல் அதிகரிப்பதுடன் தண்ணீரின் தேவையும் குறைகிறது.

    இதனால் கழிவுத்துகள் கட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.
    மேலும் வறட்சியால் வாடும் தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்காக மரத்தைச் சுற்றிலும் இக்கழிவுத் துகள்களைப் பரப்புகின்றனர். இதனால், தினமும் தென்னை மரத்துக்குத் தண்ணீர் விடுவதற்குப் பதிலாக, 4 அல்லது 6 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானதாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    தண்ணீரைச் சேமிக்க வேண்டுமானால் கழிவுத்துகள் கட்டியைப் பயன்படுத்துங்கள் என்ற கோஷம், இப்போது புதிதாக பொள்ளாச்சியில் உள்ள கழிவுத்துகள் கட்டி உற்பத்தியாளர்களிடம் எழுந்துள்ளது.
    ஒரு கிலோ கழிவுத்துகள் கட்டி 8 கிலோ தண்ணீரைத் தன்னுள் தாங்கும். இதனால் தென்னை மரத்தைச் சுற்றிலும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும்.
    அதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள், வறட்சியின்போது கழிவுத்துகள்களை தென்னை மரத்தின் வேரைச் சுற்றிலும் பரப்பி ஆயுள்காலப் பயிரான தென்னையைக் காப்பாற்றி வந்தனர்.
    பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து மட்டும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டி ரூ. 250 கோடிக்கு மேல் ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.

    நிலப்போர்வை அமைத்து விவசாயம் (Nilapporvai Amaithu Vivasayam) - Mulching in Agriculture

    கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப்போர்வை எனப்படும் “மல்ச்சிங்’ முறையை விவசாயிகள் கடைபிடித்தால், அதிக மகசூல் பெற முடியும்.



    கோடை காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையே.

    மின்வெட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை விவசாயிகள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும்.
    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் நிலப்போர்வை முறையில் தர்ப்பூசணி, மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர்.



    சேலம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இன்பராஜ் கூறியதாவது:

    • கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்.
    • பயிர்களை காப்பாற்ற நிலப்போர்வை (மல்ச்சிங்) (“Mulching“) அமைக்க வேண்டும்.
    • பிளாஸ்டிக் மல்ச்சிங், இயற்கை உர மல்ச்சிங் என்ற இரண்டு முறையின் மூலம் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியும்.
    • பிளாஸ்டிக் மல்ச்சிங் முறை மூலம், நீர் ஈரப்பதம் பராமரிக்கப்படுவதால், பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
    • மழை காலத்தில் செடியில் உள்ள வேரில் நீர் தேங்காமல் இருப்பதால், அழுகல் நோயிலிருந்தும் தப்பலாம்.
    • அசுவின் என்ற பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் முடியும்.
    • “மல்ச்சிங்’ முறையை கடைபிடிப்பதன் மூலம் மூன்று நாட்களுக்கு முன்பாகவே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    • நிலப்போர்வை அமைக்க, தமிழக அரசு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
    • தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலம், நிலப்போர்வை வாங்க, 10 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது.
    • விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் நிலப்போர்வை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
    • ஒரு போகம் முடிந்ததும், நிலத்தை மீண்டும் களைக்காமல், மற்றொரு போகம் பயிர் செய்ய முடியும்.
    • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் மிளகாய், தக்காளி, தர்ப்பூசணி போன்ற பயிர்களை நிலப்போர்வை மூலம் பயிரிட்டுள்ளனர்.
    • இந்த பகுதியில், 50 எக்டர் பரப்பளவில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
    • நிலப்போர்வை முறையில், சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதால், தண்ணீர் செலவு குறைகிறது. மகசூல் அதிகம் கிடைக்கிறது.
    • விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார உதவி வேளாண் இயக்குனர்களை சந்தித்து, விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
      இவ்வாறு அவர் கூறினார்.