Thursday, March 12, 2015

கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்


மரங்களை வளைத்துக்கட்டுதல் :
ஓரளவு வயதான கொய்யா மரங்களில் (சுமார் 10 முதல் 15 ஆண்டுகள்) கிளைகள் ஓங்கி, உயரமா வளர்ந்து, உற்பத்தியைக் குறைத்து விடும்.


இதனைச் சரி செய்ய மேற்படி கிளைகளை வளைத்து அவற்றின் நுனி பாகத்தை மண்ணுக்குள் ஒரு அடி ஆழத்தில் பதித்து அதன்மேல் கல் ஒன்றை வைத்து அவை மேலே கிளர்ந்து வராமல் செய்யலாம்.

அல்லது முன்பே மண்ணில் கனமான குச்சிகளோடு சேர்த்துக் கட்டலாம்.

இதன் மூலம் கிளைகளின் அணுக்களில் உள்ள மொட்டுக்கள் தூண்டப்பட்டு பூக்கள் அதிக அளவில் தோன்றி அதிக தரமான கனிகளை கொடுக்கும்.

மரங்களை மட்டம் தட்டுதல் :
மிக வயதான உற்பத்தி திறன் இழந்த மரங்களை, தரை மட்டத்திலிருந்து 30 செ.மீ உயரத்தில் மட்டமாக வெட்டிவிட வேண்டும்.

பின்னர் அவற்றிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும். உற்பத்தியும் மேம்படும்.

நுண்ணூட்டச்சத்து குறைபாடு :
துத்தநாகச்சத்து குறைபாட்டினால் நரம்புகளுக்கிடையே இடைவெளி குறைந்தும், செடிகள் குத்துச் செடிகள் போல தோற்றம் தருதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

பெரும்பாலும் வடிகால் வசதியற்ற நிலங்களில் இக்குறைபாடு காணப்படும்.

இவற்றைத் தவிர்க்க 500 கிராம் துத்தநாக சல்பேட், 350 கிராம் சுண்ணாம்பு இரண்டையும் 72 லிட்டர் நீரில் கரைத்து மரங்களின் மேல் இரண்டு முறை 15 முதல் 30 நாட்கள் இடைவெளியில் தெளித்து நுண்ணூட்ட குறைபாட்டினைத் தவிர்க்கலாம்.

துத்தநாகம் தவிர மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், இரும்புச்சத்து குறைபாடும் சில நேரங்களில் காணப்படும்.

இதன் அறிகுறிகளாக இலைகள் வற்றி ஓரங்கள் காய்ந்தும், சிறுத்தும் காணப்படும்.

இதனை நிவர்த்தி செய்ய 25 சதம் துத்தநாக சல்பேட், மக்னீசியம் சல்பேட், மாங்கனீஸ் சல்பேட், 12.5 கிராம் காப்பர் சல்பேட், பெர்ரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நீரில் கரைத்து இலைகளின் மேல் புதிய தளிர்கள் தோன்றும் சமயத்தில் ஒரு தடவையும், அதைத்தொடர்ந்து ஒருமாதம் கழித்து ஒருமுறையும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

போரான் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினால் வளர்ச்சி குன்றி தோன்றுவதோடு, பழங்கள் அளவில் சிறுத்து விடும்.

மேலும் பழங்களின் வெடிப்பு தோன்றி, பழத்தின் தரத்தையே குறைத்து விடும்.

இதனைக்கட்டுப்படுத்த 0.5 சதம் போராக்ஸ் (1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் போராஸ்) மருந்தை கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

(தகவல் : முனைவர் பி.பாலசுப்ரமணி, முனைவர் எம்.தமிழ்ச்செல்வன், முனைவர் எம்.பரமசிவன், மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு-630 102. போன்: 04565283 080)

No comments:

Post a Comment