Thursday, March 5, 2015

மெரினோ செம்மறி ஆடுகள்

''அமெரிக்காவின் மெரினோ, ரஷ்யாவின் ராம்புல்லே வகை செம்மறி ஆடுகளை இந்திய ஆடுகளுடன் சேர்த்து 'பாரத் மெரினோ' என்ற ஒரு வகை கலப்பு இன ஆடுகளை உருவாக்கியுள்ளோம். ஏழு மாத வயதான இந்த மெரினோ ரக ஆண் ஆடுகளை 750 ரூபாய் விலையில் விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். இதை வாங்கிச் செல்பவர்கள். ராமநாதபுரம் வெள்ளை, வேம்பூர், கீழக்கரிசல், நீலகிரி, மேச்சேரி, சென்னைச் சிவப்பு போன்ற நாட்டுரக ஆடுகளுடன் சேர்த்து இனப் பெருக்கம் செய்யலாம்.


நாற்பது பெட்டை ஆட்டுக்கு, ஒரு ஆண் (கிடா) போதுமானது. மெரினோ கலப்பு ஆடு மூலம் பிறக்கும் குட்டி 4 முதல் 5 கிலோ வரை எடை இருக்கும். ஓர் ஆண்டிலேயே குறைந்தது 110 முதல் 120 கிலோ வரை எடை வந்துவிடும். ஆனால், நாட்டு ரக ஆடு, பிறந்தபோது 1.5 முதல் 2 கிலோ எடையும், ஓர் ஆண்டில் அதிகபட்சம் 30 முதல் 35 கிலோவையும் தாண்டாது. 'மெரினோ' வகை ஆடுகள், ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி போடும்.

காலாற நடக்க வேண்டும்!
கிடை அமர்த்தி வளர்ப்பதற்கு ஏற்றது. பத்து ஏக்கருக்கு மேல் மா, தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள்... ஐம்பது ஆடுகள் வரை அந்தத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். செம்மறி ஆடுகள் காலாற நடந்து மேய்ந்து வந்தால்தான் விரைவாக வளரும். தோட்டத்தில் கோ-3, 4 ரக புல், கம்பு, அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டு, தீவனமாகக் கொடுக்கலாம். அதோடு, காய்ந்த நிலக்கடலைக் கொடியையும் போட்டால், ஓராண்டில் ஆட்டின் எடை 120 கிலோ வரை வந்து விடும். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்தால், சளி பிடிக்காது.

செம்மறி ஆடுகளைப் பொறுத்தவரை வெள்ளாடு போல புழுக்கை போடுவது குறைவுதான். கழிச்சல்தான் அதிகமாக இருக்கும். இது வாலில் தொற்றிக் கொண்டு நோய்களுக்கு வழி வகுக்கும். இதைத் தடுக்க, குட்டி பிறந்த ஒரு வாரத்திலேயே மலவாய் அருகில், வால் பகுதியை சிறிதளவு விட்டு ரப்பர் பேண்ட் போட்டு விட வேண்டும். இதனால் வால் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு வால் அறுந்து விழும். சிறிய அளவிலான வால் மட்டும் இருக்கும். ஆடு மலம் கழித்தாலும் அந்தப் பகுதியில் மலம் ஒட்டாது. இதனால் கிருமித் தொற்றும் ஏற்படாது.


ரோமம் கிலோ 75 ரூபாய்!
'ஓர் ஆண்டில் இரண்டு தடவை ஆடுகளின் ரோமத்தை வெட்டலாம். ஆடுகளை ரோமம் வெட்டும் வரை குளிப்பாட்டக் கூடாது. ஓர் ஆட்டிலிருந்து குறைந்தது மூன்று கிலோ வரை ரோமம் கிடைக்கும். மத்தியபிரதேசம், குஜராத்தைச் சேர்ந்த வியாபாரிகள். கிலோ 50 முதல் 75 ரூபாய் வரை விலைகொடுத்து இதை வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ரோமத்திலிருந்து போர்வை, ஸ்வெட்டர் என குளிரைத் தாங்கும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன'' என்று விவரித்த ராஜேந்திரன்,

''தமிழகத்தில்தான் இந்த ஆய்வு மையம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள விவசாயிகளை விட கர்நாடக விவசாயிகளே எங்களை அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடிய பாரத் மெரினோ ரக ஆண் ஆடுகள் எங்களிடம் இருக்கின்றன. எனவே தமிழக விவசாயிகளும் இந்த ஆடுகளை வளர்க்க முன் வரவேண்டும். ஆட்டுக்குட்டி தேவைப்படுபவர்கள் எங்கள் மையத்தில் முன்பதிவு செய்துகொண்டால், உரிய நேரத்தில் வழங்குவோம்'' என்று அழைப்பு வைத்தார்.

தொடர்புக்கு: மத்திய செம்மறி மற்றும் ரோம ஆராய்ச்சி மையம், மன்னவனூர், கொடைக்கானல்-624103. தொலைபேசி : 04542-276414.

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete