Wednesday, March 18, 2015

நெல் பயிருக்கு எந்த அளவு நீர்பாய்ச்சலாம்

அதிக மகசூல் பெற முடியும் என்று கருதி நெல்லுக்கு அதிக நீர் பாய்ச்சுவதால் அது எதிர்மாறான விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது என்பது ஆய்வுகளில் தெரிகிறது. எனவே நெல் பயிர் வளர்ச்சியுறும் நிலையில் அதன் வளர்ச்சி காலகட்டத்தை பொறுத்து சரியான அளவு நீரை பாய்ச்சினால் மட்டுமே அதிக மகசூலை பெற முடியும். எந்தகட்டத்தில் எவ்வளவு நீர் பாய்ச்சலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.



சாகுபடி செய்யப்படும் நெல்லின் வயது, மண்ணின் வாகு, சாகுபடியாகும் பட்டம் மழைநீரின் அளவு, வடிகால் வசதி ஆகியவற்றை பொறுத்து பாசனநீரின் தேவை நிர்ணயிக்கப்பட வேண்டும். 135 நாள் வயதுடைய உயர்விளைச்சல் நெல் வகையில் அதிக மகசூல் எடுக்க பயிரிடப்படும் முறையை கவனியுங்கள். அதாவது, 

நடவு வயல் சுலபமாக நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப ஒரே மேடு பள்ளங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 

இநாற்று நடும் போது ஒன்றரை முதல் 2 சென்டிமீட்டர் ஆழம் நீர் இருக்க வேண்டும். நடவு செய்து 3 முதல் 14 நாட்கள் வரை நட்ட பயிர் நன்கு வேர் ஊன்ற சுமார் 2 முதல் 3 செ.மீட்டர் ஆழத்திற்கு வயலில் பாசன நீர் வைக்க வேண்டும்.

நடவு செய்த 15 முதல் 30 நாட்கள் வரை தூர்கள் தண்டு கிளைக்க தண்ணீர் அளவு 5 செ.மீட்டர் வரை இருத்தல் அவசியம். 

நடவு செய்து 31 முதல் 55 நாட்கள் வரை தூர்கள் திரண்டு வளரவும், மென்மையான தூர்கள் அழியவும் தண்ணீரை வடித்து விடுவது அவசியம். வயிலின் மேற்பரப்பு மெழுகு பதத்தில் இருக்க வேண்டும். வயலில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

நடவு செய்த 36 முதல் 45 நாட்கள் வரை தூர்களை அதிக எண்ணிக்கையில் பெற 5 செ.மீட்டர் வரை பாசன நீர் விட வேண்டும். 

நடவு செய்த 46 முதல் 50 நாட்கள் வரை இளங்கதிர் பருவத்தை சீராக பேண தண்ணீர் வடித்து விட வேண்டும். மயிரிழை போன்ற வெடிப்புகள் தோன்றினாலும் பாசன நீர் விட வேண்டும்.

நடவு செய்த 51 நாள் முதல் 95 நாட்கள் வரை இளங்கதிர் வெளியில் வந்து கதிர் முற்றும் வரை 4 முதல் 5 செ.மீட்டர் அங்குல நீர் வயலில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர் அறுவடைக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன் பாசனநீரை நன்கு வடித்து வயலை காயவிட வேண்டும். 



அதிகமானால் என்ன நடக்கும்?
நீர் அளவு அதிகமானாலே, குறைந்தாலோ நெல் வயலில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

நீர் அளவு அதிகமானால் பயிரின் உயரம் அதிகரிக்கும். தூர்களின் எண்ணிக்கை குறைவதுடன் அவைகளின் வீரியமும் குறைகிறது. அதிக அளவு நீர் தேங்குவதால் மண்ணில் துத்தநாக குறைபாடு ஏற்படுகிறது.

பூக்கும் பருவத்தில் வயலில் நீர் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதிக பதர்கள் உருவாகி மகசூல் பாதிக்கும்.

அறுவடைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல் வயலில் இருந்து நீரை வடித்து விடுவது நல்லது. இதனால் நெல்மணிகள் சீராகவும், துரிதமாகவும் முற்ற உதவுகிறது.

நெற்பயிருக்கு பெரும்பாலான நாட்களில் தேவைப்படும் 5 செ.மீட்டர் அளவு நீரை தொடர்ந்து அளவு குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். வயலில் தொடர்ந்து நீர் நிறுத்தும் முறையினால் களைநிர்வாக செலவு குறையும். நடவு வயலில் 100 நாட்கள் இருக்கும் நெற்பயிருக்கு சுமார் 1200 மி.மீட்டர் அளவு நீர் தேவைப்படுகிறது. நெல்லைப் பொருத்த மட்டில் இளம்நாற்று, தூர் கிளைக்கும் பருவம், இளங்கதிர் உருவாகும் பருவம் முதல் பூக்கும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவம் வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.

No comments:

Post a Comment