Wednesday, March 11, 2015

ஆடுகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்

தவறாமல் தடுப்பூசிநோய் வந்தால் பராமரிப்பு!
ஆபத்துக்கு அழைப்பிதழ் வைக்கும் அடைப்பான்
நுண்ணுயிரி நோய்களில் முக்கியமானது அடைப்பான். இது 'பேசில்லஸ் ஆந்திராசிஸ்என்ற நுண்ணுயிரியால் வருது. இந்த நோய் தாக்கின ஆடுகளுக்கு காய்ச்சல் வந்து... திடீர்னு இறந்துடும். அப்படி இறந்த ஆடுகளோட மூக்கு, காது, ஆசனவாய் பகுதிகள்ல இருந்து உறையாத கருஞ்சிவப்பு ரத்தம் வெளியேறும். இது, முக்கியமான அறிகுறி.
அடைப்பான் தாக்கி இறந்த ஆடுகளை உணவுக்காகவோ, பிரேத பரிசோதனைக்காகவோ அறுக்கக்கூடாது. அப்படி அறுத்தா... நோய் கிருமிகள் காத்துல கலந்து பரவ ஆரம்பிச்சு, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்கூட ஆபத்தா மாறிடும். அதனால, இந்த நோய் விஷயத்துல கவனமா இருக்கணும். இறந்த ஆடுகளை குழிவெட்டி சுண்ணாம்புத்தூள் போட்டு புதைச்சுடணும். இறந்து கிடந்த இடத்தை கிருமிநாசினி மூலமா சுத்தப்படுத்தி, அந்த இடத்தை தீயிட்டு கருக்கணும். அந்தப் பகுதியில இருக்கற மத்த ஆடுகளுக்கும் உடனடியா தடுப்பூசி போடணும். இந்த நோயை ஆன்ட்டிபயாடிக் மருந்துகளால கட்டுப்படுத்திட முடியும்.

தொல்லை தரும் தொண்டை அடைப்பான்
ஆடுகளோட தொண்டைப் பகுதியில 'பாஸ்ச்சுரல்லா மல்டோசியாங்கிற நுண்ணுயிரி எப்பவும் இருக்கும். உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இது பெருகி நோயை உண்டு பண்ணும். மழைக் காலத்தில் இளம் வெள்ளாடுகளுக்கு அதிகமா இந்த நோய் வரும். காய்ச்சல், மூச்சுத்திணறல், மார்பு, கழுத்து பகுதிகள்ல வீக்கம் மாதிரியான அறிகுறிகள் தென்படும். மூக்கு, வாயிலிருந்து சளி ஒழுகும். நோய் தாக்கின அஞ்சிலருந்து ஏழு நாட்களுக்குள்ள ஆடுகள் இறந்துடும். நோய் கண்ட ஆட்டை மந்தையிலிருந்து பிரிச்சுடணும். உடனடியா, கால்நடை மருத்துவர்கிட்ட கொண்டுபோய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யணும். மத்த ஆடுகளுக்கும் உடனே தடுப்பூசி போடணும். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன தடுப்பூசி போட்டு, இந்த நோய்ல இருந்து ஆடுங்களைக் காப்பாத்தலாம்.
துவள வைக்கும் துள்ளுமாரி
'கிளாஸ்டிரீடியம் வெல்சைஎன்ற நுண்ணுயிரியால் ஏற்படுற நோய் துள்ளுமாரி. இது எல்லா வயது ஆடுகளையும் தாக்கும். அதிகமா இளம் ஆடுகளுக்கு வரும். மழைக் காலத்துல புதுசா முளைச்ச இளம்புற்களை மேயும்போது இந்த நோய் வருது. இந்த நோய்க்கிருமிகள் குடலில் எப்பவுமே தங்கி இருக்கும். திடீர்னு, அதிகமான தீவனம் எடுக்கும்போது, கிருமிகள் பெருகி, பாதிப்பு வருது. கிருமிகளோட விஷத்தன்மை நரம்பு மண்டலத்தைத் தாக்குறதால, ஆடுகள் துள்ளி விழுந்து இறந்துடும். சில சமயங்கள்ல, சளி மாதிரி வயிற்றுப் போக்கு இருக்குற அறிகுறி தெரிஞ்சா.. மேய்ச்சல் நேரத்தைக் குறைச்சு, பாதி அளவுக்கு தீவனம் எடுக்குற மாதிரி பண்ணணும். உடனே மருத்துவர்கிட்ட காமிக்கணும்.


ஆடுகளுக்கு 6 மாச வயசுல இந்த நோய்க்கான தடுப்பு ஊசியைப் போடணும். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தடுப்பூசி போட்டுடணும். புதுசா முளைச்ச புல்லை எப்பவும் மேய விடக்கூடாது. தீவனத்தை திடீர்னு அதிகப்படுத்தக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் கூட்டணும்.





கருச்சிதைவு கவனம்
கருச்சிதைவு நோய், 'புரூசெல்லா மெலிடென்சிஸ்என்ற நுண்ணுயிரியால் பரவும். இனச்சேர்க்கை மூலமா பெட்டை ஆடுகளுக்குப் பரவும். இந்த நோய் தாக்குனா ஆடுகளுக்கு மலட்டுத்தன்மை வந்துடும். கருச்சிதைவு ஏற்படும். இந்த நோயோட அறிகுறிகள் தெளிவாத் தெரியாது. கருப்பையிலிருந்து ரத்தம் கலந்த சீழ் வெளியேறும். கிடாய்களுக்குத் தாக்கினா, விரைவீக்கம் இருக்கும்.


பாதிக்கப்பட்ட ஆடுகளோட ரத்தம், பால், நச்சுக்கொடி மூலமா மத்த ஆடுகளுக்கும் நோய் பரவும். சில சமயங்கள்ல மனிதர்களுக்கும் இந்த நோய் பரவி, 'மால்ட்டா காய்ச்சல்ங்கிற நோயை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்ட ஆடுகளை மந்தையில இருந்து பிரிச்சுடணும். ரத்தப் பரிசோதனை செஞ்சு நோய் உறுதியாச்சுனா... அந்த ஆடுகளைக் கழிச்சுடணும். பாதிக்கப்பட்ட ஆடுகளில் இருந்து வெளியேறிய ரத்தம், நச்சுக்கொடி எல்லாத்தையும் அப்புறப்படுத்தி, கொட்டிலை கிருமிநாசினியால சுத்தம் செய்யணும்.

லெப்டோ ஸ்பைரோஸிஸ்
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் காய்ச்சல், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை, ரத்தம் கலந்த சிறுநீர் மாதிரியான அறிகுறிகள் தென்படும். சிறுநீர் வழியே வெளியேறுகிற நோய்க்கிருமிகள் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் ரொம்ப நாட்களுக்குத் தங்கியிருக்கும். அது மூலமா, மத்த ஆடுகளுக்கும், மனிதர்களுக்கும்கூட இந்நோய் பரவும். அதனால் சதுப்பு நிலங்கள்ல ஆடுகளை மேய்க்காமல் இருக்கறது நல்லது. ஆரம்ப நிலையிலேயே நோய்க்கு சிகிச்சை கொடுத்து காப்பாத்திடலாம்.
ஜோனிஸ்
'மைக்கோ பாக்டீரியம் பேரா ட்யூபர்குளோசிஸ்என்ற நுண்கிருமியால் ஜோனிஸ் எனும் நோய் ஏற்படும். இந்தக் கிருமிகள் குட்டி ஆடுகளோட உடம்புக்குள்ள போய், ஆடு வளர்ந்த பிறகு நோயை உண்டாக்கும். பாதிக்கப்பட்ட ஆடுகள் மூலமா மனிதர்களுக்கும் பரவும்.


ஆடுகளோட குடல் பகுதியைத் தாக்கி நோய் உண்டாக்கறதால, தொடர்ந்து துர்நாற்றத்தோட வயிற்றுப்போக்கு இருக்கும். உடல் மெலிஞ்சுக்கிட்டே வரும். சில சமயங்களில் உடம்புல வீக்கம் இருக்கும். அப்படியே இருந்து இறந்துடும். இதை தடுப்பூசி மூலம் தடுத்திடலாம்.

குளம்பு அழுகல்
'ப்யூசிபார்மிஸ் நோடோசஸ்என்ற நுண்கிருமியால் குளம்பு அழுகல் ஏற்படும். கொட்டகையில சகதி இருந்தா, கிருமிகள் பரவி ஆடுகளோட குளம்புப் பகுதியைத் தாக்கி புண் வரும். அந்த புண்கள்ல ஈக்கள் முட்டை வைக்கறதால புழுக்கள் உண்டாகும். அதனால ஆடுகள் நிக்க முடியாம மண்டி போட்டு மேயும். அதனால உடல் இளைச்சு ஆடுகள் இறந்துடும்.
கொட்டகையை சகதி இல்லாம காய்ஞ்ச நிலையில பராமரிக்கணும். ஆடுகளோட குளம்புல புழுக்கள் இருந்தா.. அதை நீக்கி 'டர்பன்டைன்எண்ணெயை பஞ்சில் நனைச்சு கட்டுப்போடணும். கால்களைச் சுத்தமாகக் கழுவி, கிருமிநாசினியைத் தடவணும். துத்தநாகக் கலவையை 5 முதல் 10 சதவிகிதம் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட கால்களை நனைக்கணும்.
ரண ஜன்னி
'டெட்டனஸ்எனப்படும் ரண ஜன்னி நோய், 'கிளாஸ்டிரீடியம் டெட்டனிஎன்ற நுண்கிருமியால வருது. நிலத்தில் இருக்குற கிருமிகள்... காயங்கள் மூலமா உடம்புக்குள்ள புகுந்து நஞ்சை உண்டு பண்ணும். இந்த நஞ்சு ரத்தத்தில் கலந்தவுடன் நோயின் அறிகுறிகள் தென்படும். முதல்ல கால்கள் விரைக்கும். தசைகள்ல நடுக்கம் வரும். தலை ஒரு பக்கமாக திரும்பி, தாடைகள் இறுகிடும்.
வாயைத் திறக்க முடியாது. வாயிலிருந்து உமிழ்நீர் வடிஞ்சுக்கிட்டேயிருக்கும். மூச்சுவிட சிரமப்படும். மலச்சிக்கல் இருக்கும். சிறுநீர் விடாது. நோய்கண்ட மூணுலருந்து... நாலு நாட்கள்ல ஆடு இறந்துடும். இந்த நோயைக் கட்டுப்படுத்த, ஆடுகளுக்கு முடிவெட்டும்போதோ, அல்லது காயடிக்கும் போதோ காயங்கள் வராமப் பாத்துக்கிடணும். ஏதாவது காயம் வந்தா, 'டெட்டனஸ் டாக்ஸாய்டுதடுப்பூசி போடணும். காயத்தை சுத்தம் செஞ்சு மருந்து போடணும்.
நிமோனியா
'கேப்ரைன் ப்ளூரோ நிமோனியாங்கிற இந்த நோய் 'மைக்கோபிளாஸ்மாங்கிற நுண்கிருமியால வருது. பாதிக்கப்பட்ட கால்நடைகள்ல இருந்து... தண்ணீர், தீவனம், காற்று மற்றும் மனிதன் மூலமாக மற்ற கால்நடைகளுக்கும் பரவும். நோய் கண்ட ஆடுகளோட உடல் வெப்பம் உயரும். மூக்கில் சளி கட்டி, மூச்சுவிட முடியாமல் இருமல் வரும். தீவனம் எடுக்காம இறந்துடும். நோய் கண்ட ஆடுகளைப் பிரிச்சு மருத்துவர்கிட்ட காட்டணும். சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தலாம்.'' என்று சொன்ன சித்ராதேவி, வைரஸ்களால் ஏற்படும் நோய்கள் பற்றியும் விவரித்தார்.

கொடுமையான கோமாரி!

''வைரஸ் தாக்குதலால் வரக்கூடிய கொடுமையான நோய்ல இதுவும் ஒண்ணு. இது மிகவேகமாக பரவும். அதிக இழப்பையும் ஏற்படுத்தும். ஆடுகள் ஒண்ணோட ஒண்ணு நெருக்கமா இருக்கறதாலயும்... நோய் கிருமிகள் கலந்திருக்குற தண்ணீர், உணவு இதையெல்லாம் எடுத்துக்கறதாலயும்... காத்து மூலமாவும் இந்த நோய் பரவ வாய்ப்பிருக்கு. ஆடுகளுக்கு காய்ச்சல் வரும். வாய், நாக்கு, கால், குளம்பு, மடி மாதிரியான இடங்கள்ல கொப்புளம் வந்து புண்ணாகும். வாயிலிருந்து நுரை, கெட்டியான உமிழ்நீர் வெளியேறும். ஆடு இரை எடுக்காது. நடக்க முடியாது. 8, 12, 16 வார வயதுகள்ல தடுப்பூசிகள் போட்டுட்டா... நோய் வராது. பிறகு, 6 மாசத்துக்கு ஒரு தடவை தடுப்பூசி போட மறக்கக் கூடாது.

வெக்கைச் சார்பு நோய் (பி.பி.ஆர்.)!

வெக்கை நோய்க்கு மிகவும் நெருங்கிய வைரஸ் கிருமியால் வர்றதால... இதை 'போலி வெக்கை நோய்’னும் சொல்வாங்க. உடல் உள் உறுப்புகள்ல வெக்கை நோய் பாதிச்சா வர்ற அறிகுறிகள் எல்லாம் இதுலயும் வரும். பாதிக்கப்பட்ட ஆடுகளோட கழிவு, தீவனம், தண்ணீர், மனிதர்கள் மூலமா மத்த ஆடுகளுக்கும் பரவும். நோய் வந்தா... ஆடுகளுக்கு காய்ச்சல் அதிகமாகும். கண்ல நீர் வடியும். இருமல், மூக்கில் சளி கட்டுதல், கெட்ட வாடையோட கூடிய கழிச்சல், வாய் உட்பகுதியில் தவிடு மாதிரியான சிறுசிறு கொப்புளங்கள் இதெல்லாம் வரும். தடுப்பூசி மூலமா இதைக் கட்டுப்படுத்தலாம். நோய் கண்ட ஆடுகளைப் பிரிச்சு, மருத்துவர் மூலமா ஆன்ட்டிபயாடிக் மருந்துகளக் கொடுக்கணும். எளிதில் செரிக்கிற மாதிரியான உணவுகளைக் கொடுக்கணும். ராகி கஞ்சியை வெல்லம் போட்டுக் கொடுக்கலாம்.

ஆட்டி வைக்கும் ஆட்டு அம்மை!


ஒரு வகை நச்சுயிர்க் கிருமியால் ஏற்படுற நோய் இது. நோய் கண்ட ஆடுகளோட உடல் வெப்பநிலை அதிகரிக்கும். தீவனம் எடுக்காது. ரோமம் இல்லாத பகுதியில கொப்புளங்கள் வரும். குட்டிகளுக்கு நோய் வந்தா... இறப்பு அதிகமாக இருக்கும். நோய் கண்ட ஆடுகள பிரிச்சு, மருத்துவர் மூலமா, ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்கணும். உடம்புல இருக்கற புண்ணுங்கள, 'பொட்டாசியம்-பர்மாங்கனேட்’ கலந்த தண்ணியால சுத்தம் செஞ்சு 'போரிக் ஆசிட்’ பவுடரைத் தூவணும். பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு கஞ்சி மாதிரியான மிருதுவான உணவைக் கொடுக்கணும். நோய் வந்த ஆடுகளோட பால் உட்பட எதையும் மனிதர்களுக்கோ... ஆட்டுக் குட்டிக்கோ பயன்படுத்தக் கூடாது. செம்மறி ஆடுகளதான் இது அதிகமா தாக்கும். தடுப்பூசி போட்டு பாதிப்பைத் தடுக்கலாம்.


நடுங்க வைக்கும் நீலநாக்கு!

'க்யூலிக்காய்ட்ஸ்’ங்கற சின்னக் கொசுக்கள் மூலமா இந்த நோய் பரவுது. இந்தக் கொசு மழைக்காலங்கள்ல அதிகமா இனப்பெருக்கம் செய்றதால... அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள்லதான் இந்த நோயும் அதிகமா பரவும். செம்மறியாடுகள்தான் அதிகமா பாதிக்கப்படும். நோய் வந்த ஆடுகளுக்கு காய்ச்சல் வரும். மூக்குல ரத்தத்துடன் கூடிய சளி வரும். உதடு, ஈறு, நாக்கு எல்லாம் வீக்கம் கண்டு, புண் உண்டாகும். சமயங்கள்ல நாக்கு தடிச்சு நீல நிறமா மாறும். கால் குளம்புகளும், தோலும் சேர்ற இடத்துல வீக்கம் ஏற்பட்டு நொண்டும். இந்நோய், கழுத்துத் தசைகளையும் பாதிக்கிறதால, கழுத்து ஓரு பக்கமாக சாய்ஞ்சுக்கும். பாதிக்கப்பட்ட ஆடுகள் இரை எடுக்காம பட்டினி கிடந்து இறந்துடும். சினை ஆடுகளுக்கு வந்தா... கருச்சிதைவு ஏற்படும். நோய் கண்ட ஆட்டை தனியா பிரிச்சுடணும். அரிசி, கம்பு, கேழ்வரகு மாதிரியான தானியங்கள்ல கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.

கொட்டிலைச் சுத்தி தண்ணி தேங்காம பாத்துக்கணும். கொட்டில்ல, வேப்பம் பிண்ணாக்கு புகை போட்டு கொசுக்கள தடுக்கணும். பாதிக்கப்பட்ட ஆடுகளோட பல்லையெல்லாம் உப்பு நீர், இல்லனா 1 லிட்டருக்கு 1 கிராம் 'பொட்டாசியம்-பர்மாங்கனேட்’ கலந்த தண்ணி மூலமா தினமும் 2 அல்லது 3 முறை கழுவணும். புண்களுக்கு கிளிசரின் தடவலாம். இறந்த ஆடுகள குழிதோண்டி, சுண்ணாம்புத்தூள் தூவி புதைக்கணும்''.

1 comment:

  1. சார் என்னுடைய ஆடு ஒன்று தினமும் கழிச்சல் போகுது அதுக்கு சரியான மருந்து சொல்லுங்கள்

    ReplyDelete